Santhirasekareecharam

Santhirasekareecharam
சந்திரசேகரீச்சரம்

செவ்வாய், 13 டிசம்பர், 2016

நடுக்காட்டினுள் கார்த்திகை ஒளிவிளக்கு பூசை வழிபாடு

சந்திரசேகரிச்சரப்பெருமானின் மெய்யடியார்களே வணக்கம்
நிகழும் துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 28 ம் நாளான இன்றும் (2016.12.13) திருக்கார்த்திகை நாளினை முன்னிட்டு சர்வாலய தீபம் என்பதனால் பல அகல்விளக்குகள் ஏற்றப்பட்டு தீப ஒளி சுடர்விட்டு எரிய எம்பெருமானுக்கு பூசைகள் இடம்பெற்றன. வில்வ அர்ச்சனையும் சிறப்பாக இடம்பெற்றது. நடுக்காட்டினுள் சென்று இந்த இரவுவேளையில் நாம் செய்த பூசைகளையும் வழிபாடுகளையும் ஏற்றுக்கொண்ட பரம்பொருளுக்கு நன்றி.

இங்கு எமது ஆரம்ப முயற்சியாக ஒரு காணொளியையும் இணைத்துள்ளோம். இன்று இரவுப் பொழுதில் கையடக்கத்தொலைபேசியில் பதிவுசெய்துள்ளமையாலும் சரியான வெளிச்ச வசதியின்மையாலும் காணொளியின் தரம் சற்றே குறைவாகத்தான் உள்ளது. அடியார்களே பொறுத்துக்கொள்க.

வியாழன், 24 நவம்பர், 2016

சந்திரசேகரீச்சரம் பற்றிய ஆய்வுகள் வீரகேசரிப் பத்திரிகையில் திரு. அருணா செல்லத்துரை அவர்களால்

அன்பர்களே வீரகேரிப் பத்திரிகையில் ” ஒரு உடகவியலாளளனின் ஊடறுப்பு” என்ற தலையங்கத்தின் கீழ் திரு. அருணா செல்லத்துரை அவர்கள் வன்னிப் பிரதேசத்தின் வரலாறுகள் பற்றி தொடர்ச்சியாக பல அய்வுக்கட்டுரைகளை எழுதி வருகின்றார். அந்த வகையில் எமது சந்திரசேகரீச்சரம் பற்றியும் வௌவாலைக் கேணி தொடர்பாகவும் சில ஆய்வுக்குறிப்புகளை படங்களுடன் வெளியிட்டுள்ளார். பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைப்பக்கத்தை புகைப்படம் எடுத்து இங்கு வெளியிடுகின்றோம். (நன்றி - அருணா செல்லத்துரை அவர்களுக்கும் வீரகேசரி பத்திரிகையினருக்கும்)
பத்திரிகையின் முழுப்பக்கத்திலும்உள்ள கட்டுரையும் படங்களும்

பத்திரிகையில் இருந்து பெரிதாக்கி எடுக்கப்பட்ட புகைப்படம்

சனி, 12 நவம்பர், 2016

மகாப் பிரதோசம் / சனிப் பிரதோசம் - வில்வ தோத்திரம்

வணக்கம் சிவபிரான் அடியார்களே

மகா பிரதோச விரதமான சனிப்பிரதோச விரத நாளான இன்று (12.11.2016) சந்திரசேகரீச்சரப்பெருமானுக்கு பிரதோச பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

கணபதி பூசை, பஞ்சகவ்விய பூசை, அபிடேக ஆராதனைகள் செய்தோம்.

அபிடேக வேளையில் தெய்வ உருவ சாந்நித்தியம் நன்கு உணரப்படக்கூடியதாக இருந்தது. வினாயகரின் உருவம் பிரமாண்டமானதாக காட்சியளித்தது. இதன்பொழுது காட்டுயானைகள் பிளிறின.

ம்பெருமான் வெளிக்கொண்டு வரப்பட்ட பின்னரான வரலாற்றில் முதற்றடவையாக வில்வ தோத்திர பாராயணம் செய்யப்பட்டது. இதன்போதும் காட்டு யானைகள் மகிழ்ச்சி ஆரவாரமாய் ஓசைகளையும் பிளிறல்களையும் வெளிப்படுத்தின. நேற்றய நாளான வெள்ளிக்கிழமை மாலைநேர பூசையின்போது எம்பெருமானுக்கு அண்மையில் இரண்டு காட்டுயானைகள் பார்த்தவண்ணம் நின்றிருந்தன. எமக்கு எத்துன்பத்தையும் விளைவிக்கவில்லை.

காட்டுப்பகுதி என்பதனால் மின்சாரவசதி கிடையாது. எனினும் மூன்று அகல்விளக்குகளை ஏற்றி வைத்துவிட்டு அவ்வெளிச்சத்திலேயே பூசைகளைச் செய்தோம். சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்னர் வரை இடம்பெற்ற அதே பாரம்பரிய முறைப்படியான பூசைவழிபாட்டு முறைகளையே இன்றளவும் செய்யக்கிடைக்கப்பெற்றது எமது தவப்பயனேயாகும். இந்த வகையில் எமது முன்னோர்கள் எந்த வகையிலும் முன்னோடிகள்தான் என எண்ணத்தோன்றுகிறது.


மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”.

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

புரட்டாதி மாத மகாளய பட்ஷ பூசைகள்

30.09.2016 திகதியாகிய இன்று சந்திரசேகரீச்சரத்தில் எம்பெருமானுக்கும் ஏனைய மூர்த்திகளுக்கும் அபிடேக ஆராதனைகள் சிறப்பாக இடம்பெற்றன.

முன்னோர்களுக்கான வழிபாடுகளும் வௌவாலைக் கேணியிலே இடம்பெற்றன.

ஆலயத்திலே முன்னோர்களுக்கான மோட்ச தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டன.


இக்கட்டான ஒரு சூழலிலும் இத்தகைய அரிய கைங்கரியங்களைச் செய்ய வைத்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி சொல்லுகின்றோம்.

திங்கள், 5 செப்டம்பர், 2016

சந்திரசேகரீச்சரத்தில் ஆவணி மாத வினாயக சதுர்த்தி

உலககெலாம் பரந்து வாழுகின்ற மெய்யடியார்களிற்கு வணக்கம்

துன்முகி வருடம் ஆவணி மாதம் 20 ம் நாள் திங்கட்கிழமையான இன்று (2016.09.05) பன்னெடுங்காலத்தின் பின் வரலாற்றில் முதல் தடவையாக சந்திரசேகரீச்சரத்தில் மகத்துவமிக்க வினாயக சதுர்த்தி விரதப் பூசைகள் இடம்பெற்றன. இந்த சிறப்பான வினாயக சதுர்த்தி நாளான இன்று எளிமையாக ஆனால் சிறப்பான முறையில் பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. வினாயகப்பெருமானுக்கும் சிவபிரானுக்கும் ஏனைய மூர்த்திகளுக்கும் அபிடேக ஆராதனைகள் இடம்பெற்றன.

மாவினால் செய்யப்பட்ட வினாயகப்பெருமான் வௌவாலை தீர்த்தக்கேணிக்கு எழுந்தருளினார். அங்கும் வழிபாடுகள் ஆற்றப்பெற்றன.

சனி, 27 ஆகஸ்ட், 2016

சந்திரசேகரீச்சரத்தில் ஆடி அமாவாசை நிகழ்வுகள்

02.08.2016 செவ்வாய்க்கிழமை அன்று ஆடி அமாவாசை விரதத்தை முன்னிட்டு சிறப்பு பூசைகள் இடம்பெற்றன. வௌவாலை தீர்த்தக்கரையில் அடியார்கள் பலரும் பிதிர்க்கடன்களைச் செலுத்தினர். தீர்த்தக்கரையில் வினாயகருக்கான வழிபாடுகளும் தொடர்ந்து சந்திரசேகரீச்சரப்பெருமானுக்கும் அபிடேக ஆராதனைகள், யாகம் என்பன இடம்பெற்றன.

அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

செவ்வாய், 3 மே, 2016

சந்திரசேகரீச்ரத்தில் இடம்பெற்ற பகவதியம்மன் யாகம்

மெய்யடியார்களுக்கு  வணக்கம்

எமது வௌவாலை சிவனாலயமான சந்திரசேகரீச்சரத்தில் கடந்த 01.05.2016 ம் திகதி ஞயிற்றக்கிழமையன்று மாலை பகவதியம்மனுக்கான யாகம் சிறப்பாக இடம்பெற்றது.

பஞ்சபூதங்களுக்கான வழிபாடும் நவக்கிரகங்களுக்கான வழிபாடும் எல்லாத்தெய்வங்களுக்கான வேண்டுதலும் குலதெய்வங்களுக்கான வழிபாடும் ஆற்றப்பட்டமை சிறப்பான் ஒருவிடயமாகும்.

யாகம் முடிவுறுவதற்கு முன்னரே வருணபகவான் தன்கருணையை மழையாகப் பொழிந்து தள்ளினார்.

பகவதியம்மனின் புனித கலசத்து நீர் அடியார்கள் மீதும் தெளிக்கப்பட்டது.

வியாழன், 21 ஏப்ரல், 2016

சித்திரைப் பூரணை வழிபாடு

மெய்யடியார்களே வணக்கம்
21.04.2016 ம் திகதி வியாழக்கிழமையான இன்று சந்திரசேகரீச்சரத்தில் சித்திரைப்பூரணை விரதத்தை முன்னிட்டு சித்திரைக்கஞ்சிப் படையலுடன் மடையும் பரவப்பட்டு சிறப்பு பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

இன்று மழைக்கான அறிகுறி எதுவுமில்லாத போதிலும் ஆலயத்தின் மேலாக வானில் சுமார் 300 அடி விட்டம் கொண்டதாக கருமுகில் சூல்கொண்டு மழைத்துளிகள் வீழ்ந்தன. எனினும் முற்றத்தில் மூட்டியிருந்த அடுப்பு அணைந்து விடாமல் கஞ்சி வெந்துகொண்டிருந்த பானையினுள் மழைத்துளிகள் வீழ்ந்தன. ஆகாய கங்கையும் தன்பங்குக்கு கஞ்சி காய்ச்ச தண்ணீர் தந்தது போலும். 

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

சித்த யோகியர் செய்த சிறப்பு யாகம்

மெய்யடியார்களே வணக்கம்
குறிப்பிட்டது போலவே கடந்த 07.04.2016 ம் திகதியன்று எமது வெளவாலை சிவனாலயமான சந்திரசேகரீச்சரத்தில் சித்த யோகிமார் கலந்து கொண்டு யாகம், யோகம், பயிற்சி, தீட்சை போன்றனவற்றை செய்தனர்.

திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு போன்ற தூர இடங்களில் இருந்தும் வவுனியா நகரில் இருந்தும் செட்டிகுளம் பகுதியில் இருந்தும் பல அடியார்கள் கலந்துகொண்டனர்.

சில அற்புதங்கள்

  • தந்திரிமலை, செட்டிகுளம், சிப்பிக்குளம் போன்ற பல இடங்களில் அன்று கடும் மழை கொட்டித்தீர்த்தது. ஆயினும் எம்பெருமானின் இருப்பிடத்தைச்சூழ சிறு அளவிலேதான் மழை தூறிய வண்ணம் இருந்தது. ஒருவாறு மரத்தடிகளை நிறுத்தி தற்காலிக கொட்டகை அமைத்துக்கொண்டிருந்தோம். திடீரென ஒருதடவை பலத்த மழை பெய்து நிலமெங்ஙனமும் கடும் ஈரமாகிவிட்டது. சிறுமழை பெய்தால்கூட ஆலயச்சூழல் சேறும் சகதியுமாகிவிடும். வழக்கம்போல் இறைவன்மீது வேண்டுதலை வைத்துவிட்டு எமது பணியைத்தொடர்ந்த வண்ணமிருந்தோம். பாதுகாப்புக்கடமைகளையாற்ற வரும் காவல்துறையினரை ஏற்றி வந்த முச்சக்கர வண்டி தடம்புரளுமளவுக்கு காட்டுப்பாதை சகதியாக மாறியிருந்தது. தெய்வாதீனமாக விபத்து ஏதும் இன்றி அவர்கள் வந்து சேர்ந்தனர். சுமார் அரை மணிநேரம் சென்றிருக்கும் ஆலய நிலமும் காட்டுப்பாதையும் மழைபெய்ததற்கான அறிகுறி எதுவுமின்றி பழையபடி கட்டாந்தரையாக காய்ந்துவிட்டன. இது ஈசனின் திருவிளையாடலன்றோ?
  • வினாயகர் வழிபாடு தொடங்கியதும் சற்றுத்தொலைவில் காட்டு யானைகள் பிழிறின. இது வினாயகப்பெருமானின் ஆசிர்வாதம்போலும்.
  • புகைப்படம் எடுத்துப்பார்த்தபோது யாகத்தீயின் சுடர்கள் தெய்வங்களின் உருவங்களாக காட்சிதந்தன.

திங்கள், 4 ஏப்ரல், 2016

சித்த யோகிமார் கலந்து சிறப்பிக்கும் மகா யாக யோக பயிற்சி - விசேட யாகமும் வழிபாடுகளும்


மெய்யடியார்களே வணக்கம்

எமது சந்திரசேகரீச்சரம் ஆலயத்தில் எதிர்வரும் 07.04.2016 ம் திகதி வியாழக்கிழமை மாலை நேரத்தில் இருந்து அன்றிரவு முழுவதும் விசேட யாகபூசை இடம்பெற உள்ளது.

இலங்கையின்  சித்தர்கள் யோகிகள் அதிகளவில் கலந்து சிறப்பிக்கும் மகா யாகயோக பயிற்சிகளும் இரவு முழுவதும் இடம் பெறும். சித்த அடியார்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்....


நன்றி:- சித்தர்களின்குரல் முகநூல். தகவலுக்கும் புகைப்பட வெளியீட்டுக்கும்

புதன், 30 மார்ச், 2016

சிறப்பாக இடம்பெற்றது மகா சிவராத்திரி வழிபாடு

மெய்யடியார்களே வணக்கம்

எம்பெருமானின் திருவருள் பாலித்ததற்கு அமைய இவ்வாண்டும் நிகழும் மன்மத வருடம் மாசி மாதம் 24 ம் நாள் திங்கட் கிழமையன்று (07.03.2016) மகா சிவராத்திரி வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றது. பகலும் இரவும் பூசைகள் இடம்பெற்றன. நான்கு சாமப் பூசைகளும் கிரமமாக நடந்தேறியது.


வழிபாட்டு முறைகள் வன்னிப்பகுதிக்கேயுரிய தனித்துவமான பத்ததிகளின்படி தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


அடியார்கள் வௌவாலைக் கேணியில் தீர்த்தம் எடுத்துக் கொண்டுவந்து தமது கரங்களால் அபிடேகம் செய்யும் பாக்கியம் பெற்றனர். விடியும் வரை கண்விழித்து வழிபாடாற்றினர். 


வழமைபோல் இம்முறையும் சிவகாயத்திரி யாகம் சிறப்புற இடம்பெற்றது.


வினாயகருக்கான சிறப்பு வழிபாடுகளும் பூசைகளும் இடம்பெற்றன.

இம்முறை வவுனியாவில் இருந்தும் தந்திரிமலையில் இருந்தும் அடியார்கள் பலர் அதிகளவில் கலந்துகொண்டனர்.


காவல்துறையினர் விடிய விடிய பணியாற்றிக் கொண்டிருந்தனர். பூசை வழிபாடுகளிலும் கலந்துகொண்டு உவகைகொண்டனர்.


மறுநாட்காலை மாகேசுரபூசையாகிய அன்னதானம் வழங்கப்பட்டது

திருப்பணியில் ஒரு படி

மெய்யடியார்களே வணக்கம்.
சிவாலயத்திருப்பணி செய்ய பலரும் பலவாறு முயற்சி செய்கின்றோம். எனினும் அது கைகூடுவதும் ஈசன் சித்தமே. எம்பெருமான் எழுந்தருளியுள்ள இடம் – நிலம் ஆனது சற்றே தாழ்நிலமாக இருப்பது கண்டு அதனை மண்ணிட்டு நிரப்ப வேண்டுமென கடந்த நான்கு ஆண்டுகளாகதிட்டமிட்டு இருந்தேன். அது 05.03.2016 ம் திகதியாகிய இன்றுதான் நிறைவேறியது. சுமார் ” 13 டிப்பர் ” பெட்டிகள் அளவில் மண் கொட்ட முடிந்தது. அதுவும் 05 நாட்கள் கடும் பிரயத்தனம் பண்ண வேண்டியதாயிற்று. அடுத்தடுத்து தடைகள் பல்வேறு விதங்களில் வந்து சேர்ந்தன.
       இவ்விடயத்திலும் ஈசனின் ஒரு திருவிளையாடலைச் சொல்லித்தான் ஆகவேண்டும். 05 நாட்களாக முயற்சி செய்தும் மண்ணைத் தோண்டுகின்ற வாகனம் சரிவர இயங்கவில்லை. ஓரளவு அதனைத் திருத்தம் செய்தால் இயங்கவைக்கத் தேவையான எரிபொருள் கிடைக்கவில்லை. இரண்டும் சரிவந்தபொழுது ”டிப்பர்” வாகனம் கிடைக்கவில்லை. சரிபோகட்டும் வேறுவாகனத்தைக் கேட்டாலோ காட்டு வழிப்பாதை ”டயர்” வெடித்துவிடும் என்கிறார்கள். மனப்பாரத்தை எம்பெருமான் சந்திரசேகரீச்சரப்பெருமான் மீது போட்டுவிட்டு இருந்துவிட்டேன்.
             ஒருவாறு 05.03.2016 சனிக்கிழமையான இன்று வேறு ஒருவரது வாகனம் கிடைத்தது. ஆலயத்தேவைக்கென 300 செங்கற்களை ஏற்றிக்கொணடு எம்பெருமான் எழுந்தருளியுள்ள காட்டினுள் சென்றாயிற்று. வாகனத்தின் டயர்கள் தேய்வுற்று வழவழப்பாக வாழைப்பழத்தோல் போன்று காணப்பட்டன. பாதையுமோ டயர்ளை பதம் பார்க்க தயாராக இருந்தது. வாகனத்தின் சாரதிக்கோ ஒரே நெஞ்சிடி. டயர் வெடித்துவிட்டால் என்னசெய்வது. காட்டினுள் உதவிக்கு யார் வருவார் என்றெல்லாம் சிந்தித்தித்து இருக்கிறார். எமது மதமல்லாத அவர் ஒருகணம் சந்திசேகரீச்சரப்பெருமானை நினைத்து வேண்டுதல் செய்தாராம். பின்னர் செங்கற்களை எம்பெருமானடியில் இறக்கிவிட்டு இயந்திரத்தால் மண்தோண்டுகின்ற இடத்துக்கு வாகனத்தகை் கொண்டுவந்து சேர்த்தார். மண் நிரப்பியதும் மீண்டும் காட்டுப்பாதை வழியே பயத்துடன் பயணம் ஆரம்பமானது. என்னே ஆச்சரியம் டயர்களைப் பதம் பார்க்க காத்திருந்த காட்டுப்பாதை அழுத்தம் திருத்தமாக செப்பனிடப்பட்டிருந்தது. மகிழ்ச்சி ததும்ப உற்சாகத்துடன் காட்டினுள்ளே சென்று கொண்டிருந்தோம். வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபையின் இயந்திரசூத்திரம் ஒன்று (MOTOR CRADER) எம்பெருமானது இருப்பிடம் வரை பாதையொன்றை உருவாக்கிக் கொண்டிருந்தது. பிரதேச சபையினருக்கு நன்றி சொன்னோம்.

                                                  நான்கு ஆண்டுகளாக எம்மைக் காக்கவைத்து எமது பொறுமையைச் சோதித்தான் எம்பெருமான். அதேநேரம் எமது மத நம்பிக்கையற்ற சகோதர மதவழி நம்பிக்கையுள்ள அந்த வாகனத்தின் சாரதியின் கணப்பொழுது வேண்டுதலை நாழிகைப் பொழுதில் நிறைவேற்றி அருள் செய்தான் நம் இறைவன்.  அந்தச் சாரதியும் நாமும் சந்திரசேகரீச்சரப் பெருமானை நோக்கி நெடுநேரம் கைகூப்பித் தொழுது நின்றோம்.  தென் நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

திங்கள், 29 பிப்ரவரி, 2016

சிவராத்திரி விரதம்

அடியார்களே,
ஈழத்திருநாட்டின் வடபால் வன்னிப்பிரதேசத்தில் வெங்கலச்செட்டிகுளம் பகுதியில் வரலாற்றுப்புகழ் மிக்க மூர்த்தி தலம் தீர்த்தச் சிறப்புப் பெற்ற வௌவாலை சந்திரசேகரீச்சரம் சிவனாலயத்தில் நிகழும் மங்களகரமான மன்மத வருடம் மாசி மாதம் 24 ம் நாள் திங்கட்கிழமையன்று (07.03.2016 ம் திகதி)  காலையில் பூசை வழிபாடுகள் ஆரம்பமாகி அன்று இரவு மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு  நான்கு சாமப் பூசைகளும் சிறப்பாக இடம்பெற்று வழிபாடுகள் செய்வதற்கு திருவருள் கூடியுள்ளது.

மெய்யடியார்களே மகத்துவமிக்க இந்த மகா சிவராத்திரி நாளிலே ஆலயத்திற்கு வருகை தந்து மகா சிரைாத்திரி விரதத்தை அனுட்டித்து பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டு புண்ணிய தீர்த்தமான வௌவாலையில் நீராடி தங்களின் கரங்களினாலே சிவலிங்கத்துக்கு அபிடேகம் செய்து புண்ணியம் பெறுவீர்களாக.

அடியார்களே பூசைக்குத் தேவையான பால், பழவகைகள், இளநீர், பூக்கள், பூமாலைகள், போன்றவற்றையும் அர்ச்சனைப் பொருட்களையும் ஆலயத்திற்கு கொண்டு வரவும்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு  மறுநாள் காலை அன்னதானம் வழங்கப்படும்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

வௌவாலை சந்திரசேகரீச்சரத்தில் மாசி மாதப் பௌர்ணமி வழிபாடு - மாசி மகம் தீர்த்த பூஜை












மெய்யடியார்களே வௌவாலை சந்திரசேகரீச்சரத்தில்  மன்மத வருடம் மாசி மாதம் 10 ம் நாள் திங்கட்கிழமை ஆகிய (22.02.2016) இன்று மாசி மகம் - மாசி மாதப் பௌர்ணமியை முன்னிட்டு விசேடமாக சந்திரசேகரீச்சரப் பெருமானுக்கு அபிடேக ஆராதானைகள் இடம்பெற்றன. அத்துடன் வௌவாலையில் புனித தீர்த்த பூஜையும் இடம்பெற்றது.

திங்கள், 8 பிப்ரவரி, 2016

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

தைப்பூசம்-கோயில்-காடு-யானை




நாம் குறிப்பிட்டது போல் இறையருளால் தைப்பூச நாளான இன்று (24.01.2016) சந்திரசேகரீச்சரத்தில் வழிபாடுகள் அபிடேகஆராதனைகளுடனும் யாகம் பூசைகளுடனும் இனிதே இடம்பெற்றது. அடர்ந்த காட்டிடையே சந்திரசேகரீச்சப்பெருமான் உறைகின்றபோதும் காட்டுவழியே சிரமங்களிடையே பயணித்து வரவேண்டியிருந்தபொழுதிலும் இறைவனைக்காணும் ஆவல் உந்தப்பெற்று வருகைதரும் அடியார்களை நினைக்க இறைபக்தி மேலும் வலுக்கிறது. இன்று வழிபாட்டில் கலந்துகொண்ட அடியார்கள் தமக்கு பல்வேறுவிதமான மனநிறைவான அனுபவங்கள் ஏற்பட்டதை கூறி மகிழ்ந்தவண்ணமிருந்தனர். 

வழமைபோன்று இன்றும் இரவு நிலவொளியைத்தவிர வேறு வெளி்சசமில்லாததன் காரணமாக காட்டுச்சூழல் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. யானைககள் பிரதானவீதியில்கூட நடமாடுவதாக சேனைப்பயிர்களிற்கு காவலிருப்போர் எச்சரித்திருந்ததனால் இன்னும் அச்சம் ஒருபடிமேலோங்கியே இருந்தது. எப்படியோ காட்டைத்தாண்டி பிரதானவீதிக்கு வத்துவிட்டோம். நான் உந்துருளியிலும் ஏனைய அடியார்கள் முச்சக்கரவண்டியிலுமாக வந்துகொண்டீருந்தோம். இருபுறமும் காடுதான் வேறொன்றும் தெரியவில்லை. திடீரென்று ஒரு சத்தம் காதையடைக்க நெஞ்சம்பதைக்கும்வகையில் கேட்டது. நடுவீதியில் நாமும் காட்டு யானையும் நேருக்குநேர் எதிர்ப்பட்டு விட்டோம். அதனால் யானை பிளிறிய சத்தம்தான் அது. நல்லவேளை கைதொடும் தூரத்தில் யானை பக்கவாட்டாக திரும்பிக்கொண்டது. நாம் யானையால் தாக்கப்படவில்லை. ஈசன் எம்மைக்காத்தான். இருமாதங்களிற்க்கு முன்பு அதேயிடத்திற்கண்மையில் கடந்த 28.11.2015 ம் திகதி சனிக்கிழமையன்று மாலைப்பொழுதில்  நடுவீதியில் எதிர்த்திசையில் யானை துரத்திவர உந்துருளியை சிரமப்பட்டுத்திருப்பி ஒருநொடியில் தப்பித்துக்கொண்டேன். அன்றும் ஈசன் எனைக்காப்பாற்றியருளினான். இது இப்படியிருக்க காட்டு யானைகள் கூட்டம் எம்பெருமானடியில் செய்த ஆச்சரியமுட்டும் பல தெய்வீகச் செயல்களையும் குறிப்பிட்டடேயாகவேண்டும் அவற்றைப் பின்னர் கூறுகிறேன். அன்பே சிவம். ஓம் நமசிவய.

வியாழன், 21 ஜனவரி, 2016

தைப்பூசம் - சிறப்பு வழிபாடு

மெய்யடியார்களே நிகழும் மன்மத வருடம் தை மாதம் 10 ம் நாளன்று (எதிர்வரும் 2016.01.24 திகதி, ஞாயிற்றுக்கிழமை) சந்திரசேகரீச்சரப் பெருமானுக்கும் வினாயகர், முருகன் முதலிய மூர்த்திகளுக்கும் அபிடேக ஆராதனைகள் இடம்பெற்று தைப்பூச வழிபாடு நடாத்தப்படவுள்ளது. சில 100 ஆண்டுகளுக்குப்பின்னர் இத்தகைய தைப்பூச நன்னாள் ஒன்றில்தான் எம்பெருமானை நிலைநிறுத்தினோம் (பிரதிஷ்டை செய்தோம்) என்பதும் குறிப்பிடத்தக்கது. விரும்பும் அடியார்கள் வந்து கலந்து கொண்டு இறையருள் பெற அழைக்கின்றோம்.

குறிப்பு - காலையில் இருந்து மாலை வரை வழிபாடுகள் இடம்பெறும். ஆலயச்சூழல் காடடர்ந்த பிரதேசம் என்பதைனாலும் யானை போன்ற காட்டு விலங்குகளின்  அச்சுறுத்தல் இருக்கக்கூடுமாதலாலும் பகல் வேளையில் வருகைதருவது நன்று.

புதன், 20 ஜனவரி, 2016

இறைவனும் ஆன்மாக்களின் நிலையும்

ஆன்மாக்களாகிய நாம் முத்தியடையும்பொருட்டுக் கருணைப் பெருங்கடலான சிவபெருமான் தடத்தநிலையைவிடவும் கீழ்நிலைப்பட்டு வந்து குணங்குறிகளைத் தனக்கு கற்பித்தும் அருவம் அருவுருவம் உருவம் முதலாய நிலைகளைத் தாங்கியும் ஐந்தொழில்களையும் புரிபவனாய் நின்று எமக்குத் தனுகரண புவன போகங்களைத் தந்துள்ளான். உயிர்கள் தமக்கு ஞான நிலை வந்தெய்தும்பொழுதே இவற்றை உணரவல்லதாகின்றன. அதுவரை அவை அஞ்ஞான இருளில் மூழ்கிக்கிடக்க வேண்டியதாகின்றன. ஆன்மா ஏன் இறைவனை அடையமுடியாமல் தடுக்கப்படுகிறது, இங்கு தடையாயிருப்பது என்ன?. இவை பற்றிய தகுந்த விளக்கங்களை வரவிருக்கும் பதிவீடுகளில் பார்ப்போம். மேலும் கடந்த பதிவில் குறிப்பிட்டவாறு சந்திரசேகரீச்சரம் குறித்த செய்திகளையும் பார்ப்போம், வணக்கம்.

சனி, 9 ஜனவரி, 2016

சிவபூமி என திருமூலரால் போற்றப்பட்ட ஈழத்திருநாட்டின் சிவாலயங்கள்

உலகெலாம் பரந்து வாழுகின்ற சைவப் பெருமக்களிற்கு வௌவாலை சந்திரசேகரீச்சரப் பெருமானின் பேரருள் கிட்டுவதாக. 

மெய்யடியார்களே வணக்கம், ஈழத்திருநாட்டில் பல சிவாலயங்கள் இருக்கின்றன. இவற்றில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சுவாமிகளாலும் சுந்தர மூர்த்தி நாயனார் சுவாமிகளாலும் தேவாரம் பாடப்பெற்ற தலங்களாக திருக்கோணேச்சரமும் திருக்கேதீச்சரமும் விளங்குகின்றன. மேலும் முன்னேச்சரம், நகுலேச்சரம், இலங்கையின் தென்கோடியிலே தெய்வேந்திர முனைக்கண்மையில் தொண்டீச்சரம் என்பனவும் காணப்படுகின்றது. அதுமட்டுமல்லாது ஒட்டுசுட்டான் தான்தோன்றியீச்சரம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றியீச்சரம் என்பனவும் தமக்கேயுரிய தனிச்சிறப்புடன் திகழ்கின்றன. வரலாற்றுச் சிறப்புப் பெற்றதும் விஜய மன்னனின் வருகைக்கு முன்னரே இங்கு காணப்பட்டதும் மூர்த்தி தல தீர்த்தச்சிறப்பு மிக்கதும் வன்னி மன்னர்களால் ஆதரிக்கப்பெற்றதும் தென்னிந்திய வணிகனான தமிழகத்தைச்சேர்ந்த வீரவராஜன் செட்டி (வீரநாராயணச் செட்டி) என்பவரால் திருப்பணி செய்யபட்டதுமான சந்திரசேகரீச்சரம் (சந்திரசேகரீஸ்வரம்) பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். அது இருந்தே சுவடேயில்லாமல் அழிந்துபோயும் தேடிச்சென்று கண்டடைய முடியாதபடி காடுமண்டிக்கிடப்பதும் யார் கண்ணிலும் படாமல் இருப்பதையும் நினைக்க சற்றுத்தயக்கமாகத்தான் இருக்கிறது. இருப்பினும் இறையருள்  உந்தப்பெற்று சந்திரசேகரீச்சரப் பெருமான் இருந்த இடத்தை ஒருவாறு அடியேன் தேடியறிந்து பல இடர்களையும் தாண்டி தற்பொழுது வழிபாடு இடம்பெறுமளவுக்கு செய்துள்ளேன். இவ்வாலய வரலாற்றுச்சிறப்பையும் உத்தம அடியார்கள் செய்த உதவிகளையும் கிடைக்கப்பெற்ற அரச உதவிகள் பற்றியும் தொடர்ச்சியாகப் பார்க்கலாம். அடியார்களின் அனுபவப் பகிர்வுகளும் இடம்பெறும். வாழ்க வளமுடன். அன்பே சிவம். ஓம் நமசிவய.

இணையத்தள முகவரி

Our blog address published on January 05, 2016
எமது இணையத்தள முகவரி ஜனவரி 05 ம் திகதி 2016 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. காண்பதற்கு இங்கே சொடுக்கவும் (Clik Here) சந்திரசேகரீச்சசரம் பற்றிய இணைய - வலைத்தள முகவரி

Santhira Sekareecharam photos