Santhirasekareecharam

Santhirasekareecharam
சந்திரசேகரீச்சரம்

புதன், 30 மார்ச், 2016

சிறப்பாக இடம்பெற்றது மகா சிவராத்திரி வழிபாடு

மெய்யடியார்களே வணக்கம்

எம்பெருமானின் திருவருள் பாலித்ததற்கு அமைய இவ்வாண்டும் நிகழும் மன்மத வருடம் மாசி மாதம் 24 ம் நாள் திங்கட் கிழமையன்று (07.03.2016) மகா சிவராத்திரி வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றது. பகலும் இரவும் பூசைகள் இடம்பெற்றன. நான்கு சாமப் பூசைகளும் கிரமமாக நடந்தேறியது.


வழிபாட்டு முறைகள் வன்னிப்பகுதிக்கேயுரிய தனித்துவமான பத்ததிகளின்படி தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


அடியார்கள் வௌவாலைக் கேணியில் தீர்த்தம் எடுத்துக் கொண்டுவந்து தமது கரங்களால் அபிடேகம் செய்யும் பாக்கியம் பெற்றனர். விடியும் வரை கண்விழித்து வழிபாடாற்றினர். 


வழமைபோல் இம்முறையும் சிவகாயத்திரி யாகம் சிறப்புற இடம்பெற்றது.


வினாயகருக்கான சிறப்பு வழிபாடுகளும் பூசைகளும் இடம்பெற்றன.

இம்முறை வவுனியாவில் இருந்தும் தந்திரிமலையில் இருந்தும் அடியார்கள் பலர் அதிகளவில் கலந்துகொண்டனர்.


காவல்துறையினர் விடிய விடிய பணியாற்றிக் கொண்டிருந்தனர். பூசை வழிபாடுகளிலும் கலந்துகொண்டு உவகைகொண்டனர்.


மறுநாட்காலை மாகேசுரபூசையாகிய அன்னதானம் வழங்கப்பட்டது

திருப்பணியில் ஒரு படி

மெய்யடியார்களே வணக்கம்.
சிவாலயத்திருப்பணி செய்ய பலரும் பலவாறு முயற்சி செய்கின்றோம். எனினும் அது கைகூடுவதும் ஈசன் சித்தமே. எம்பெருமான் எழுந்தருளியுள்ள இடம் – நிலம் ஆனது சற்றே தாழ்நிலமாக இருப்பது கண்டு அதனை மண்ணிட்டு நிரப்ப வேண்டுமென கடந்த நான்கு ஆண்டுகளாகதிட்டமிட்டு இருந்தேன். அது 05.03.2016 ம் திகதியாகிய இன்றுதான் நிறைவேறியது. சுமார் ” 13 டிப்பர் ” பெட்டிகள் அளவில் மண் கொட்ட முடிந்தது. அதுவும் 05 நாட்கள் கடும் பிரயத்தனம் பண்ண வேண்டியதாயிற்று. அடுத்தடுத்து தடைகள் பல்வேறு விதங்களில் வந்து சேர்ந்தன.
       இவ்விடயத்திலும் ஈசனின் ஒரு திருவிளையாடலைச் சொல்லித்தான் ஆகவேண்டும். 05 நாட்களாக முயற்சி செய்தும் மண்ணைத் தோண்டுகின்ற வாகனம் சரிவர இயங்கவில்லை. ஓரளவு அதனைத் திருத்தம் செய்தால் இயங்கவைக்கத் தேவையான எரிபொருள் கிடைக்கவில்லை. இரண்டும் சரிவந்தபொழுது ”டிப்பர்” வாகனம் கிடைக்கவில்லை. சரிபோகட்டும் வேறுவாகனத்தைக் கேட்டாலோ காட்டு வழிப்பாதை ”டயர்” வெடித்துவிடும் என்கிறார்கள். மனப்பாரத்தை எம்பெருமான் சந்திரசேகரீச்சரப்பெருமான் மீது போட்டுவிட்டு இருந்துவிட்டேன்.
             ஒருவாறு 05.03.2016 சனிக்கிழமையான இன்று வேறு ஒருவரது வாகனம் கிடைத்தது. ஆலயத்தேவைக்கென 300 செங்கற்களை ஏற்றிக்கொணடு எம்பெருமான் எழுந்தருளியுள்ள காட்டினுள் சென்றாயிற்று. வாகனத்தின் டயர்கள் தேய்வுற்று வழவழப்பாக வாழைப்பழத்தோல் போன்று காணப்பட்டன. பாதையுமோ டயர்ளை பதம் பார்க்க தயாராக இருந்தது. வாகனத்தின் சாரதிக்கோ ஒரே நெஞ்சிடி. டயர் வெடித்துவிட்டால் என்னசெய்வது. காட்டினுள் உதவிக்கு யார் வருவார் என்றெல்லாம் சிந்தித்தித்து இருக்கிறார். எமது மதமல்லாத அவர் ஒருகணம் சந்திசேகரீச்சரப்பெருமானை நினைத்து வேண்டுதல் செய்தாராம். பின்னர் செங்கற்களை எம்பெருமானடியில் இறக்கிவிட்டு இயந்திரத்தால் மண்தோண்டுகின்ற இடத்துக்கு வாகனத்தகை் கொண்டுவந்து சேர்த்தார். மண் நிரப்பியதும் மீண்டும் காட்டுப்பாதை வழியே பயத்துடன் பயணம் ஆரம்பமானது. என்னே ஆச்சரியம் டயர்களைப் பதம் பார்க்க காத்திருந்த காட்டுப்பாதை அழுத்தம் திருத்தமாக செப்பனிடப்பட்டிருந்தது. மகிழ்ச்சி ததும்ப உற்சாகத்துடன் காட்டினுள்ளே சென்று கொண்டிருந்தோம். வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபையின் இயந்திரசூத்திரம் ஒன்று (MOTOR CRADER) எம்பெருமானது இருப்பிடம் வரை பாதையொன்றை உருவாக்கிக் கொண்டிருந்தது. பிரதேச சபையினருக்கு நன்றி சொன்னோம்.

                                                  நான்கு ஆண்டுகளாக எம்மைக் காக்கவைத்து எமது பொறுமையைச் சோதித்தான் எம்பெருமான். அதேநேரம் எமது மத நம்பிக்கையற்ற சகோதர மதவழி நம்பிக்கையுள்ள அந்த வாகனத்தின் சாரதியின் கணப்பொழுது வேண்டுதலை நாழிகைப் பொழுதில் நிறைவேற்றி அருள் செய்தான் நம் இறைவன்.  அந்தச் சாரதியும் நாமும் சந்திரசேகரீச்சரப் பெருமானை நோக்கி நெடுநேரம் கைகூப்பித் தொழுது நின்றோம்.  தென் நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.