Santhirasekareecharam

Santhirasekareecharam
சந்திரசேகரீச்சரம்

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

தைப்பூசம்-கோயில்-காடு-யானை




நாம் குறிப்பிட்டது போல் இறையருளால் தைப்பூச நாளான இன்று (24.01.2016) சந்திரசேகரீச்சரத்தில் வழிபாடுகள் அபிடேகஆராதனைகளுடனும் யாகம் பூசைகளுடனும் இனிதே இடம்பெற்றது. அடர்ந்த காட்டிடையே சந்திரசேகரீச்சப்பெருமான் உறைகின்றபோதும் காட்டுவழியே சிரமங்களிடையே பயணித்து வரவேண்டியிருந்தபொழுதிலும் இறைவனைக்காணும் ஆவல் உந்தப்பெற்று வருகைதரும் அடியார்களை நினைக்க இறைபக்தி மேலும் வலுக்கிறது. இன்று வழிபாட்டில் கலந்துகொண்ட அடியார்கள் தமக்கு பல்வேறுவிதமான மனநிறைவான அனுபவங்கள் ஏற்பட்டதை கூறி மகிழ்ந்தவண்ணமிருந்தனர். 

வழமைபோன்று இன்றும் இரவு நிலவொளியைத்தவிர வேறு வெளி்சசமில்லாததன் காரணமாக காட்டுச்சூழல் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. யானைககள் பிரதானவீதியில்கூட நடமாடுவதாக சேனைப்பயிர்களிற்கு காவலிருப்போர் எச்சரித்திருந்ததனால் இன்னும் அச்சம் ஒருபடிமேலோங்கியே இருந்தது. எப்படியோ காட்டைத்தாண்டி பிரதானவீதிக்கு வத்துவிட்டோம். நான் உந்துருளியிலும் ஏனைய அடியார்கள் முச்சக்கரவண்டியிலுமாக வந்துகொண்டீருந்தோம். இருபுறமும் காடுதான் வேறொன்றும் தெரியவில்லை. திடீரென்று ஒரு சத்தம் காதையடைக்க நெஞ்சம்பதைக்கும்வகையில் கேட்டது. நடுவீதியில் நாமும் காட்டு யானையும் நேருக்குநேர் எதிர்ப்பட்டு விட்டோம். அதனால் யானை பிளிறிய சத்தம்தான் அது. நல்லவேளை கைதொடும் தூரத்தில் யானை பக்கவாட்டாக திரும்பிக்கொண்டது. நாம் யானையால் தாக்கப்படவில்லை. ஈசன் எம்மைக்காத்தான். இருமாதங்களிற்க்கு முன்பு அதேயிடத்திற்கண்மையில் கடந்த 28.11.2015 ம் திகதி சனிக்கிழமையன்று மாலைப்பொழுதில்  நடுவீதியில் எதிர்த்திசையில் யானை துரத்திவர உந்துருளியை சிரமப்பட்டுத்திருப்பி ஒருநொடியில் தப்பித்துக்கொண்டேன். அன்றும் ஈசன் எனைக்காப்பாற்றியருளினான். இது இப்படியிருக்க காட்டு யானைகள் கூட்டம் எம்பெருமானடியில் செய்த ஆச்சரியமுட்டும் பல தெய்வீகச் செயல்களையும் குறிப்பிட்டடேயாகவேண்டும் அவற்றைப் பின்னர் கூறுகிறேன். அன்பே சிவம். ஓம் நமசிவய.

வியாழன், 21 ஜனவரி, 2016

தைப்பூசம் - சிறப்பு வழிபாடு

மெய்யடியார்களே நிகழும் மன்மத வருடம் தை மாதம் 10 ம் நாளன்று (எதிர்வரும் 2016.01.24 திகதி, ஞாயிற்றுக்கிழமை) சந்திரசேகரீச்சரப் பெருமானுக்கும் வினாயகர், முருகன் முதலிய மூர்த்திகளுக்கும் அபிடேக ஆராதனைகள் இடம்பெற்று தைப்பூச வழிபாடு நடாத்தப்படவுள்ளது. சில 100 ஆண்டுகளுக்குப்பின்னர் இத்தகைய தைப்பூச நன்னாள் ஒன்றில்தான் எம்பெருமானை நிலைநிறுத்தினோம் (பிரதிஷ்டை செய்தோம்) என்பதும் குறிப்பிடத்தக்கது. விரும்பும் அடியார்கள் வந்து கலந்து கொண்டு இறையருள் பெற அழைக்கின்றோம்.

குறிப்பு - காலையில் இருந்து மாலை வரை வழிபாடுகள் இடம்பெறும். ஆலயச்சூழல் காடடர்ந்த பிரதேசம் என்பதைனாலும் யானை போன்ற காட்டு விலங்குகளின்  அச்சுறுத்தல் இருக்கக்கூடுமாதலாலும் பகல் வேளையில் வருகைதருவது நன்று.

புதன், 20 ஜனவரி, 2016

இறைவனும் ஆன்மாக்களின் நிலையும்

ஆன்மாக்களாகிய நாம் முத்தியடையும்பொருட்டுக் கருணைப் பெருங்கடலான சிவபெருமான் தடத்தநிலையைவிடவும் கீழ்நிலைப்பட்டு வந்து குணங்குறிகளைத் தனக்கு கற்பித்தும் அருவம் அருவுருவம் உருவம் முதலாய நிலைகளைத் தாங்கியும் ஐந்தொழில்களையும் புரிபவனாய் நின்று எமக்குத் தனுகரண புவன போகங்களைத் தந்துள்ளான். உயிர்கள் தமக்கு ஞான நிலை வந்தெய்தும்பொழுதே இவற்றை உணரவல்லதாகின்றன. அதுவரை அவை அஞ்ஞான இருளில் மூழ்கிக்கிடக்க வேண்டியதாகின்றன. ஆன்மா ஏன் இறைவனை அடையமுடியாமல் தடுக்கப்படுகிறது, இங்கு தடையாயிருப்பது என்ன?. இவை பற்றிய தகுந்த விளக்கங்களை வரவிருக்கும் பதிவீடுகளில் பார்ப்போம். மேலும் கடந்த பதிவில் குறிப்பிட்டவாறு சந்திரசேகரீச்சரம் குறித்த செய்திகளையும் பார்ப்போம், வணக்கம்.

சனி, 9 ஜனவரி, 2016

சிவபூமி என திருமூலரால் போற்றப்பட்ட ஈழத்திருநாட்டின் சிவாலயங்கள்

உலகெலாம் பரந்து வாழுகின்ற சைவப் பெருமக்களிற்கு வௌவாலை சந்திரசேகரீச்சரப் பெருமானின் பேரருள் கிட்டுவதாக. 

மெய்யடியார்களே வணக்கம், ஈழத்திருநாட்டில் பல சிவாலயங்கள் இருக்கின்றன. இவற்றில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சுவாமிகளாலும் சுந்தர மூர்த்தி நாயனார் சுவாமிகளாலும் தேவாரம் பாடப்பெற்ற தலங்களாக திருக்கோணேச்சரமும் திருக்கேதீச்சரமும் விளங்குகின்றன. மேலும் முன்னேச்சரம், நகுலேச்சரம், இலங்கையின் தென்கோடியிலே தெய்வேந்திர முனைக்கண்மையில் தொண்டீச்சரம் என்பனவும் காணப்படுகின்றது. அதுமட்டுமல்லாது ஒட்டுசுட்டான் தான்தோன்றியீச்சரம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றியீச்சரம் என்பனவும் தமக்கேயுரிய தனிச்சிறப்புடன் திகழ்கின்றன. வரலாற்றுச் சிறப்புப் பெற்றதும் விஜய மன்னனின் வருகைக்கு முன்னரே இங்கு காணப்பட்டதும் மூர்த்தி தல தீர்த்தச்சிறப்பு மிக்கதும் வன்னி மன்னர்களால் ஆதரிக்கப்பெற்றதும் தென்னிந்திய வணிகனான தமிழகத்தைச்சேர்ந்த வீரவராஜன் செட்டி (வீரநாராயணச் செட்டி) என்பவரால் திருப்பணி செய்யபட்டதுமான சந்திரசேகரீச்சரம் (சந்திரசேகரீஸ்வரம்) பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். அது இருந்தே சுவடேயில்லாமல் அழிந்துபோயும் தேடிச்சென்று கண்டடைய முடியாதபடி காடுமண்டிக்கிடப்பதும் யார் கண்ணிலும் படாமல் இருப்பதையும் நினைக்க சற்றுத்தயக்கமாகத்தான் இருக்கிறது. இருப்பினும் இறையருள்  உந்தப்பெற்று சந்திரசேகரீச்சரப் பெருமான் இருந்த இடத்தை ஒருவாறு அடியேன் தேடியறிந்து பல இடர்களையும் தாண்டி தற்பொழுது வழிபாடு இடம்பெறுமளவுக்கு செய்துள்ளேன். இவ்வாலய வரலாற்றுச்சிறப்பையும் உத்தம அடியார்கள் செய்த உதவிகளையும் கிடைக்கப்பெற்ற அரச உதவிகள் பற்றியும் தொடர்ச்சியாகப் பார்க்கலாம். அடியார்களின் அனுபவப் பகிர்வுகளும் இடம்பெறும். வாழ்க வளமுடன். அன்பே சிவம். ஓம் நமசிவய.

இணையத்தள முகவரி

Our blog address published on January 05, 2016
எமது இணையத்தள முகவரி ஜனவரி 05 ம் திகதி 2016 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. காண்பதற்கு இங்கே சொடுக்கவும் (Clik Here) சந்திரசேகரீச்சசரம் பற்றிய இணைய - வலைத்தள முகவரி

Santhira Sekareecharam photos